வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள்-ரூ.80 ஆயிரம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள்-ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2022-08-22 18:51 GMT

ஆண்டிமடம்:

தையல் தொழிலாளி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை தெற்கு தெருவில் வசித்து வருபவர் சுந்தரவடிவேலு(வயது 55). தையல் தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை சுந்தரவடிவேலு வீட்டின் கேட்கள் மற்றும் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரரான ராஜ்குமார் என்பவர், இது குறித்து சுந்தரவடிவேலுக்கும், ஆண்டிமடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நகை-பணம் திருட்டு

மேலும், சுந்தரவடிவேலுவை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் நகைகள், ரொக்கம் வைக்கப்பட்டிருந்த இடங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து வீட்டிற்குள் போலீசார் பார்த்தபோது 2 படுக்கை அறைகளிலும் இருந்த அலமாரிகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவை இல்லை.

இதையடுத்து போலீசாரின் விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு அரியலூர் கைரேகை நிபுணர்கள் வந்து பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்