வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-10-13 21:01 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

13 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மனைவி கோமளவல்லி (வயது 48). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்காக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர் உடனே உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளையும் காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து கோமளவல்லி தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்