காவலாளி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் திருட்டு
காவலாளி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் திருட்டுபோனது.;
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆண்டி குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தர்மராஜ் வேலைக்கு சென்றார். இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவி செல்வி, தனது 2 குழந்தைகளுடன் ஆண்டி குரும்பலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு தூங்கச்சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் தையல் எந்திரத்தை திருடிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் 4 மர்ம நபர்கள் அந்த வீட்டில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவத்தை கொண்டு, அவர்களை தேடி வருகின்றனர்.