நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டையில் நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;
உளுந்தூர்பேட்டை
நர்சு
உளுந்தூர்பேட்டை தபால் அலுவலகம் எதிரில் வசித்து வருபவர் ஜமுனா. இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜமுனா நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஜமுனாவுக்கு தகவல் கொடுத்தனர்.
நகை,பணம் கொள்ளை
அதன்பேரில் ஜமுனாவின் கணவர் முருகன் உடனடியாக திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
பின்னர் இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் கொள்ளை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.