பிராட்வே பேருந்து நிலையம்: நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

புதிதாக அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.;

Update:2024-08-31 16:03 IST

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் பிராட்வே பேருந்து நிலையத்தில், குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க ரூ.822.70 கோடிக்கான நிர்வாக அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப் போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு சில்லறை கடைகள் அமைந்தன.

சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

பெருநகர சென்னை மாநகராட்சி மூலம், சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் (Multi Modal Facility Complex - MMFC) அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புதிதாக அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்