தக்காளியை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிலோ ரூ.100-ஐ தொட்டது இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தக்காளியை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிலோ ரூ.100-ஐ தொட்டது இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்
நாமக்கல்லில் தக்காளியை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிலோ ரூ.100-ஐ தொட்டு இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.90 என நிர்ணயம் செய்தாலும், வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. எனவே தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தக்காளியை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிடுகிடு என உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் நாமக்கல் உழவர் சந்தையில் அவரைக்காய் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அவற்றின் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், கிலோவுக்கு ரூ.40 அதிகரித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பனிக்காலம்
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகளிடம் கேட்டபோது பனிக்காலத்தில் நாமக்கல் உழவர் சந்தைக்கு 200 முதல் 300 கிலோ வரை அவரைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 5 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. அவரைக்காய் வரத்து குறைந்து இருப்பதால், விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும்பட்சத்தில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.
தக்காளியை தொடர்ந்து அவரைக்காய் விலையும் கிலோ ரூ.100-ஐ தொட்டு இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.