கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்

இடையக்கோட்டை பகுதியில் கத்தரிக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

Update: 2023-04-11 19:00 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, புல்லாகவுண்டனூர், கப்பல்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கத்தரிக்காய் சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நன்கு விளைச்சல் அடைந்துள்ள நிலையில் கத்தரிக்காய் அறுவடை பணி நடந்து வருகிறது. பின்னர் அவற்றை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கப்பல்பட்டியை சேர்ந்த விவசாயி சிதம்பரம் கூறுகையில், கத்தரிக்காய் வரத்து அதிகரித்து இருப்பதால், குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சில நேரத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் கத்தரிக்காய் வீணாகி விடுகிறது. அக்கம்பக்கத்தினருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். கத்தரிசெடி நடவு செய்தல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், உரம், பூச்சிமருந்து தெளித்தல், கூலி என கணக்கிட்டு பார்த்தால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்