ராணிவாய்க்கால் சீரமைப்பு-சிறிய பாலம் கட்டும் பணி

தஞ்சை காந்திஜிசாலை-ஜி.ஏ.கெனால் ரோடு சந்திப்பில் ராணிவாய்க்கால் சீரமைப்பு-சிறிய பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-30 19:38 GMT

தஞ்சை காந்திஜிசாலை-ஜி.ஏ.கெனால் ரோடு சந்திப்பில் ராணிவாய்க்கால் சீரமைப்பு-சிறிய பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணி வாய்க்கால்

தஞ்சை மாநகரில் பெய்யும் மழைநீரானது, அப்போது அமைக்கப்பட்ட ராணி வாய்க்கால் மூலம் வடிந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழவாசல் அழகி குளத்துக்கும், அகழிக்கும் சென்றது. காலப்போக்கில் மாநகரின் விரிவாக்கப் பகுதிகளால் இந்த வாய்க்காலின் நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போனது. அதே போல் அழகி குளமும் தூர்ந்து போனது.

இந்தநிலையில் பொதுமக்கள் அழகிகுளத்தை தூர்வாரி குளத்தை சீரமைத்தனர். இதை தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியினர் ராணி வாய்க்கால் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த ராணி வாய்க்கால் புதுஆறு ஆற்றின் குறுக்கே இர்வின் பாலம் அருகில் ஆற்றுக்கு கீழ் பகுதியில் செல்கிறது. இர்வின் பாலத்தை இடித்துவிட்டு மீண்டும் புதிதாக அகலப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது ராணி வாய்க்காலின் நீர் வழித்தடத்தையும் புதுப்பிக்க முயற்சி செய்யப்பட்டது.

சீரமைப்பு பணி

ஆனால் ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை முடிக்க முடியவில்லை. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆற்றின் குறுக்கே ராணி வாய்க்கால் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாய்க்கால் இருக்கும் இடத்தை பொக்லின் எந்திரம் மூலம் தோண்டி கான்கிரீட் அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது.

அடுத்தகட்டமாக காந்திஜிசாலை, ஜி.ஏ.கெனால் ரோடு சந்திக்கும் இடத்தில் ராணிவாய்க்கால் சீரமைப்பு மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக சாலையின் குறுக்கே பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணி நடைபெறுவதால் ஜி.ஏ.கெனால் ரோடு வழியாக காந்திஜிசாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பதாகை நெடுஞ்சாலைத்துறை மூலம் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை அருகேயும், முனியாண்டவர் கோவில் பின்புறமும் தடுப்புகளுடன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மாற்றுவழியில் சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்