வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா?- கிராம மக்கள்

திருமருகல் அருகே வாய்க்கால் குறுக்கே உள்ள ஆபத்தான கான்கிரீட் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-02-18 19:15 GMT

திருமருகல் அருகே வாய்க்கால் குறுக்கே உள்ள ஆபத்தான கான்கிரீட் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வாய்க்கால் பாலம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே கான்கிரீட் பாலம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

குறுகிய பாலமாக இருப்பதால் அவசர தேவைகளுக்கு இந்த வழியே பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது இந்த கான்கிரீட் பாலம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தின் தடுப்புச்சுவர்களும் சேதம் அடைந்துள்ளன.

ஆபத்தான நிலையில்...

இடிந்து விழும் ஆபத்து உள்ளதால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். பாலத்தின் அருகே உள்ள கிராமங்களில் தீவிபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பாலம் வழியாக செல்பவர்கள் நிலை தடுமாறி வாய்க்காலில் விழும் ஆபத்து உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் சீரமைத்து தர வில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்