இடிந்து விழும் நிலையில் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம்

திருவாரூர் மடப்புரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-16 18:45 GMT

திருவாரூர் மடப்புரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடம்போக்கி ஆற்றுப்பாலம்

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே சிறிய நடை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த பாலத்தின் தூண்கள் செல்லரித்து காணப்படுகிறது.

மிகவும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. பாலத்தின் இரு புறத்திலும் உள்ள தடுப்புகள் இடிந்து விழுந்து வருவதால், போக்குவரத்தினை சீரமைப்பதற்கு வைக்கப்படும் இரும்பு தடுப்புகள் (பேரிகார்டுகள்) அங்கு முன்னெச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளன.

தற்காலிகமாக சீரமைப்பு

அவ்வப்போது தற்காலிகமாக சீரமைப்பு செய்தாலும், பாலம் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. பொதுமக்கள் வேறு வழியின்றி பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். திருவாரூர்- தஞ்சை சாலையில் இருந்து நகருக்குள் வருவதற்கு கல்பாலம் மற்றும் பழைய பஸ் நிலையம் வழித்தடம் மட்டுமே உள்ளது. இந்த இருவழித்தடங்களும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.

திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளதால் எளிதாக நகருக்குள் வருவதற்கு மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் மிகுந்த பயன் அளித்து வருகிறது.

பள்ளிகள்- ஆஸ்பத்திரிகள்

மடப்புரம் அருகில் தனியார் பள்ளிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் மடப்புரத்தில் உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பாலத்தில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. ஆனால் எதிரெதிரே மோட்டார் சைக்கிள்கள் கூட வர முடியாத நிலையில் பாலம் குறுகலாக உள்ளது.

இந்த பாலம் இடிந்தால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்களும், இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்தி விட்டு அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலத்தை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் கூறியதாவது:-

நிதி ஒதுக்கீடு

மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றுப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவாக செல்ல இந்த பாலம் பயன்பட்டு வருகிறது.

மேலும் திருவாரூர் நகர் பகுதிக்கு இணைப்பு பாலமாகவும் இருந்து வருகிறது. தற்போது சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ள இந்த பாலத்தை விரைவாக அப்புறப்படுத்தி புதிய பாலம் கட்ட வேண்டும். இந்த பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலம் கட்டுவதற்கான பணிகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, எனவே மக்கள் நலன் கருதி விபத்து ஏற்படும் முன்பு புதிய பாலம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்