பெருகி வரும் வாகனங்கள்... தொடரும் விபத்துகள்... ஓசூரில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-11-08 18:45 GMT

ஓசூர்:

பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஓசூரில், பாகலூர் சாலையில் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொழில் நகரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் நகரமாகும். இங்கு குண்டூசி தயாரிக்க கூடிய நிறுவனங்கள் முதல் விமானம் தயாரிக்க கூடிய நிறுவனம் வரை உள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை கொண்ட ஓசூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும், இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்க கூடிய பகுதியாக ஓசூர் நகரம் உள்ளது. தொழில் நிமித்தமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஓசூரில் குடிபெயர்ந்துள்ளனர்.

இத்தகைய ஓசூர் கர்நாடக மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகில், ராயக்கோட்டை பிரிவு சாலை அருகில், குமுதேப்பள்ளி அருகில், தர்கா அருகில், ஜூஜூவாடி அருகில் என பல இடங்களில் உயர் மட்ட மேம்பாலங்கள் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்

ஆனால் நகருக்குள் உயர்மட்ட பாலங்கள் இல்லாததால் நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக ஓசூரில் பாகலூர் சாலை இன்று நகரின் மைய பகுதியாகவும், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் கொண்ட பகுதியாகவும் விளங்குகின்றது.

இதைத் தவிர தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் என ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ள இந்த பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்து காணப்படுகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதிகளான பாகலூர் அட்கோ, டீச்சர்ஸ் காலனி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, மூவேந்தர் நகர், ஆவலப்பள்ளி அட்கோ, பஸ்தி என பல்வேறு பகுதிகள் இந்த சாலையில் அமைந்துள்ளன. பாகலூர், ஜி.மங்கலம், சித்தனப்பள்ளி, நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல கூடிய வாகனங்களும், கர்நாடக மாநிலம் மாலூர், மாஸ்தி, கோலார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்.

உயர்மட்ட பாலம் அவசியம்

எந்த அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ, அதே அளவு அந்த சாலையில் விபத்துகளும் தினமும் நடந்து வருகின்றன. பல நேரங்களில் பொதுமக்கள் காயமடைகிறார்கள். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. நகரின் முக்கிய பகுதியாக இருக்க கூடிய இந்த சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஓசூரில் புதிய பஸ் நிலையம எதிரில் ஜி.ஆர்.டி. சர்க்கிள் அருகில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை உயர்மட்ட பாலம் அவசியமாக தேவைப்படுகிறது. இதை கொண்டு வந்தால் சேலம், கோவை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்ததை போல ஓசூரிலும் குறைய வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

சாகச பயணம்

ஓசூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் பெரியசாமி:-

ஓசூர் நகரம் வேகமாக வளர்ந்து வரும் மாநகரம் ஆகும். இங்கு சாலை விரிவாக்கம் அவசியம் தேவைப்படுகிறது. ஓசூர் ஜி.ஆர்.டி. சர்க்கிளில் இருந்து எங்கள் டீச்சர்ஸ் காலனிக்கு இருசக்கர வாகனத்திலோ, நடந்து செல்வதோ ஒரு சாகசமாக உள்ளது.

இன்றைய நிலையில் ஒரு முறை மாநகர பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் பாகலூர் சாலை வழியாக செல்வது என்பது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. அந்தளவிற்கு போக்குவரத்து நெரிசல் மக்களை, வாகன ஓட்டிகளை நாள்தோறும் வாட்டி வதைக்கிறது.

ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வரையில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக்கப்பட்டுள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து விட்டது. அதே போல ஓசூர் நகரின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு பாகலூர் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டிட வேண்டும்.

வெகுவாக குறையும்

ஓசூர் பாகலூர் ரோடு ஆவலப்பள்ளி அட்கோவை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பைரோசுல்லா:-

ஓசூரில் பாகலூர் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி உயிர் இழப்புகளும் நடக்கின்றன. வெவ்வேறு பகுதிகளிலிருந்து பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள், லாரிகள், பாகலூர் சாலை வழியாக எளிதில் விரைவாக சென்று விடும் நோக்கத்துடன் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றன.இந்த வாகனங்கள் சாலையை அடைத்துக்கொள்வதால் மற்ற வாகனங்களுக்கு வழி இன்றி நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. எனவே பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும், வாகன ஓட்டிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும் ஓசூர் ஜி.ஆர்.டி. சர்க்கிளில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மேம்பாலம் உடனடியாக அமைப்பது கட்டாயம் ஆகும். இதை அமைத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஓசூரில் பிரதான சாலையான பாகலூர் சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதை செயல்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்