காதல் மனைவியை படிக்க வைக்க திருடனாக மாறிய கொத்தனார்

குமரி மாவட்டத்தில் காதல் மனைவியை படிக்க வைக்க திருடனாக மாறிய கொத்தனாரை போலீசார் கைது செய்து 15 பவுன் நகைகளை மீட்டனர்.

Update: 2022-07-27 17:06 GMT

அழகியபாண்டியபுரம்:

குமரி மாவட்டத்தில் காதல் மனைவியை படிக்க வைக்க திருடனாக மாறிய கொத்தனாரை போலீசார் கைது செய்து 15 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நகை பறிப்பு

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நடுமார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம், தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தன்னுடைய மனைவி ஏஞ்சல் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அருகில் உள்ள அனந்தனார் கால்வாயில் குளிக்கச் சென்றார். ஏஞ்சல் அங்குள்ள பாலத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். ஆபிரகாம் அருகில் உள்ள குளக்கரைக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென துணி துவைத்துக் கொண்டிருந்த ஏஞ்சலின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து ஏஞ்சல் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபரை பிடித்து விசாரணை

இந்தநிலையில் சிராயன்குழி பகுதியில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் குலசேகரம் அருகே உள்ள சிதறால் பகுதியை சேர்ந்த கொத்தனாரான தனீஷ் (வயது24) என்பதும், துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இதுதொடர்பாக போலீசாரிடம் தனீஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

மனைவியை படிக்க வைக்க...

நான் காதல் திருமணம் செய்து கொண்டேன். எனது மனைவி பி.எஸ்.சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதற்கு பணம் கட்ட முடியவில்லை. இதனால் திருட முடிவு செய்தேன். மண்டைக்காடு கோவில் திருவிழாவின் போது பருத்திவிளை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறித்தேன். பின்னர் எனது மகன் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக திட்டுவிளை அருகே உள்ள அனந்தனார் கால்வாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையையும் பறித்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தனீசை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் 15½ பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்