சமுதாய நல பயிற்றுநர்களிடம் லஞ்சம் வாங்கிய மகளிர் திட்ட உதவி அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு

சமுதாய நல பயிற்றுநர்களிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக மகளிர் திட்ட அலுவலர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-09-15 18:45 GMT


விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் சமுதாய சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற இருந்தது. இந்நிலையில் பயிற்சி வகுப்பில் பங்கேற்க இருந்த சமுதாய நல பயிற்றுநர்களிடம் வங்கி மூலம் பெறப்பட்ட சம்பள பணத்தில் ஒரு பகுதியை தங்களுக்கு லஞ்சமாக தர வேண்டும் என வட்டார இயக்க மேலாளர் கலைச்செல்வி, உதவி திட்ட அலுவலர் சித்ரா ஆகியோர் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

2 பேர் மீது வழக்கு

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

அவை சமுதாய நல பயிற்றுநர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக உதவி திட்ட அலுவலர் சித்ரா (வயது 50), வட்டார இயக்க மேலாளர் கலைச்செல்வி (38) ஆகியோரை நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூ.3 லட்சத்து 16 ஆயிரம், கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விருத்தாசலம் மண்டல உதவி திட்ட அலுவலர் முத்துபாண்டியையும், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்