மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்: டீன் சிவக்குமார்

பெண்கள் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-14 18:45 GMT

பெண்கள் அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்வதுடன், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு மாதம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் மருந்தியல் துறை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் ஜி.சிவக்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் டி.அமுதன் வரவேற்று பேசினார். புற்றுநோய் மருந்தியல் துறை டாக்டர் காந்திமதி மற்றும் கதிரியக்க துறை தலைமை டாக்டர் லலிதா சுப்பிரமணியன் ஆகியோர் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்...

நிகழ்ச்சியில் டீன் பேசுகையில், "உலகளவில் ஏற்படும் புற்றுநோய்களில் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் முதன்மையாக உள்ளது. இதுதொடர்பாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு 'பிங்க்' மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். மார்பக புற்றுநோயை பெண்கள் சுய பரிசோதனை மூலமே எளிதாக கண்டறியலாம். எனவே, பெண்கள் அடிக்கடி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

நோயிலிருந்து மீண்டவர்கள்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள், ரங்கோலிகளை வரைந்து இருந்தனர். அந்த ஓவியங்கள், ரங்கோலிகளை டீன் சிவக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கலந்து ெகாண்டவர்கள்

நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ததேயுஸ், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, புற்றுநோய் கதிரியக்க துறை டாக்டர் இன்சுவை மற்றும் டாக்டர்கள், நர்சுக் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புற்றுநோய் மருந்தியல் துறை மருத்துவர் கே.எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்