திருவள்ளூர் அருகே மாதா சிலை கூண்டு கண்ணாடி உடைப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே மாதா சிலை கூண்டு கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-03-14 08:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பூண்டி பஸ் நிலையத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு 6 அடி கொண்ட பூண்டி மாதா சிலை கிறிஸ்தவர்களால் நிறுவப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 5-வது வாரம் மாதா தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை மாதா சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி கூண்டு சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

மேலும் மாதா சிலைக்கு கீழே மதுபாட்டில்கள் சிதறி கிடந்தன. இதனால் இரவு நேரத்தில் மாதா சிலை அருகில் மது அருந்தியவர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கண்ணாடி கூண்டை உடைத்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு இதே மாதா சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சிலைக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்