தேவாலய வளாகத்தில் சிலைகள் உடைப்பு

திண்டுக்கல்லில் தேவாலய வளாகத்தில் சிலைகள் உடைத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-12 16:59 GMT

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்தில் செல்போனில் பேசியபடி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் ஆலய வளாகத்தில் உள்ள மாதா சிலை, இயேசு சிலுவையை சுமப்பது போன்ற சிலை ஆகியவற்றை உடைக்க தொடங்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் தெற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்ததும், தேவாலய வளாகத்தில் செல்போன் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துச்சென்ற ஆத்திரத்தில் சிலைகளை உடைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்