அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்- மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்

அனைத்து பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-10-13 20:15 GMT

காலை உணவு திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சுமார் 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் உள்ளது.. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்ட கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இல்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதிகளில் ஏழ்மையின் காரணமாக மீனவர்களின் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். எனவே கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

படிப்படியாக விரிவுபடுத்தப்படும்

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசுத்தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்