தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 66 பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 66 பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது. அதன்படி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 8 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 2 அரசு தொடக்கப்பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.