காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும்பெற்றோர்கள் கோரிக்கை

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-30 18:45 GMT

முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காலை உணவு திட்டம்

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனவு திட்டமான 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான கடந்த 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தினை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு இதற்காக ரூ.33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. காலை வேளைகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சாப்பிடாமல் வரக் கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டமானது தொடங்கப்பட்டு தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் 14 பள்ளிகளிலும், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகளிலும் மற்றும் திருவத்திபுரம் நகராட்சியில் 7 பள்ளிகளிலும் என மொத்தம் 64 பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் பெருமிதம்

அனைத்து சத்துக்களும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவு திட்டம் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1922-ம் ஆண்டு சென்னை மாநகர தலைவராக சர் பிட்டி தியாகராஜன் இருந்த போது பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டு இருந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல்- அமைச்சராக காமராஜர் இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தினை கொண்டு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு பள்ளிகளில் உணவு வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு புரத சத்து கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சத்துணவுடன் முட்டையும் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

அந்த வகையில் இந்த காலை உணவு திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில்,'' சர் பிட்டி தியாகராஜன், காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகிய 4 பேரின் மொத்த உருவமாக திகழ்வதாக கூறினார் என திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உணவு வகைகள்

இந்த திட்டத்தின் மூலம் திங்கட்கிழமைதோறும் உப்புமா வகைகள் (ரவா, சேமியா, அரிசி, கோதுமை) மற்றும் காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை காய்கறி கிச்சடி வகை (ரவா, சேமியா, சோளம், கோதுமை), புதன்கிழமைகளில் பொங்கல் வகைகள் (ரவா, வெண் பொங்கல்) மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் உப்புமா வகை (ரவா, சேமியா, அரிசி, கோதுமை) மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் காய்கறி கிச்சடி (ரவா, சேமியா, சோளம், கோதுமை) மற்றும் ரவா கேசரி அல்லது சேமியா கேசரி ஆகியவை தொடக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவ, மாணவிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் இந்த திட்டத்தை மனதார பாராட்டுகின்றனர். இந்த திட்டத்தில் குறைகள் இருந்தால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு வரப்படும் காட்சி, பரிமாறப்படும் காட்சிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்கிறார்கள். இன்று உணவு சரியாக சரியான நேரத்துக்கு வந்ததா? தரமாக இருந்ததா?, எத்தனை பேர் சாப்பிட்டார்கள்? போன்ற கேள்விகளுக்கும் பதில் அளித்து அனுப்புகிறார்கள்.

உடனுக்குடன் பதிவேற்றம்

இது குறித்து திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் முருகேசன் கூறுகையில், ''சமையல் மையத்தில் தயார் செய்யப்படும் உணவு வகைகள் சரியான நேரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கி விடுகின்றனர்.

பின்னர் 9 மணிக்கு பள்ளி வகுப்புகள் தொடங்கப்படுவதால் அதற்கு முன்னதாகவே மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டுவிடும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடம் செல்போன் செயலி வழங்கப்பட்டு உள்ளது. உணவு வந்த நேரம், மாணவர்களுக்கு பரிமாறி முடித்தோர் போன்ற பதிவுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை எந்த குறைபாடும் ஏற்படவில்லை'' என்றார்.

உன்னதமான திட்டம்

இது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூறுகையில், ''காலை உணவு திட்டம் வந்த பிறகு மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுகின்றனர். சோர்வு அடையாமல் கல்வியிலும், விளையாட்டிலும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். பள்ளிக்கு படிக்க வரும் ஏழை, எளிய குழந்தைகளின் பசியை காலை உணவு என்ற உன்னதமான திட்டத்தின் மூலம் போக்கி உள்ள முதல்-அமைச்சரை பெற்றோர்கள் சார்பிலும், அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் பாராட்டுகிறோம். இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்றனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த ராகினி கூறுகையில், மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து உள்ள முதல்- அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள் வீட்டில் சாப்பிடுவது போன்று இல்லாமல் சக மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிடும் போது கூடுதலாகவே சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளனர். இதனால் முதல்-அமைச்சர் கொண்டு வந்த இந்த காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. காய்கறி சாம்பார் வைக்கும் நாட்களில் மாணவர்கள் அனைவரும் கூடுதலாக சாப்பிடுகின்றனர். வெறும் கிச்சடி வைக்கும் நாட்களில் குறைவாகவே சாப்பிடுகின்றனர். அதனால் காய்கறி சாம்பார் தினசரி வழங்க வேண்டும் என்றார்.

ருசியான உணவு

பெற்றோர் தரப்பில் திருவண்ணாமலையை சேர்ந்த பிரியா கூறுகையில், ''தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பான திட்டமாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என் பிள்ளை மட்டுமின்றி ஏராளமான குழந்தைகள் இந்த திட்டத்தினால் பயன்பெற்று வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இந்த திட்டம் தொடங்கும்போது இட்லி, இடியாப்பம், பூரி போன்றவை தான் வழங்குவார்கள் என்று எண்ணினோம். ஆனால் சத்துகள் மிகுந்த காய்கறி வைத்து உணவு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் ஊட்டச்சத்தில் முதல்- அமைச்சர் கண்ணும் கருத்துமாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டம் அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தீபக் பிரியன் கூறுகையில், ''காலையில் வீட்டில் டிபன் செய்வதற்கு தாமதம் ஆவதால் பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வரும் நிலை இருந்தது. தற்போது பள்ளியிலேயே காலை உணவு கிடைப்பதால், சீக்கிரம் வந்து விடுகிறேன். பள்ளிக்கு வந்தவுடன் எங்களுக்கு சுவையான உணவு கிடைக்கிறது. உணவு வகைகள் சூப்பரா இருக்கு. அதிலும் காய்கறி சாம்பார் ருசியாகவும், சூப்பராகவும் இருக்கிறது. வயிறு நிறைய சாப்பிடுகிறேன். மகிழ்ச்சியாக நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன். எங்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சருக்கு அனைத்து மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்