அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2022-07-28 00:22 GMT

சென்னை,

மாணவ-மாணவிகளின் தற்கொலையை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மனநலம்-உடல்நலம்' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் 3 மாதத்துக்கு ஒரு முறை 2 அரசு டாக்டர்கள் சென்று மாணவ-மாணவிகளுக்கு மனநலம்-உடல்நலம் குறித்து தன்னம்பிக்கை ஊட்ட உள்ளனர்.

முதல்-அமைச்சர்

மனநலம்-உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு தலைமை தாங்கி பேசினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

காலை சிற்றுண்டி

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நான், அதில் இருந்து சிறிது குணமடைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும், உடல் சோர்வு என்பது சற்று இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கும்போது அதெல்லாம் பறந்து போய்விடுகிறது. முழுநலம் பெற்றதாக நான் உணர்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலையிலேயே எல்லோரும் சீக்கிரமாகவே புறப்பட்டு இங்கே வந்திருப்பீர்கள். நீங்கள் எல்லாம் காலை உணவு சாப்பிட்டீர்களா?. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றபோது, பலமுறை சாப்பிடாமல் பள்ளிக்கு போயிருக்கிறேன். ஏனென்றால், பஸ் பிடிக்க வேண்டுமென்பதால், அது ஒரு சூழ்நிலை. இது நகரப்பகுதி, ஆனால், கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களை எண்ணிப்பார்க்கிறபோது, எந்த அளவுக்கு அவர்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான பிள்ளைகள் காலையில் புறப்படும்போது சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.

அதிகாலையில் அவசர, அவசரமாக நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பி வரவேண்டிய சூழல் இருப்பதை மனதில் வைத்து அதிலும் குறிப்பாக, 1-வது முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாடு அரசு தொடங்கப்போகிறது. அதற்கான அரசாணையில் நேற்று (நேற்று முன்தினம்) தான் நான் கையெழுத்து போட்டு வந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆரால்...

திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி தலைவராக இருந்த சர்.பிட்டி.தியாகராயர் சென்னை மாநகராட்சி மன்ற தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில்தான் முதன் முதலாக மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். என்னை முதன் முதலாக தேர்ந்தெடுத்த தொகுதி ஆயிரம் விளக்கு தொகுதிதான். தியாகராயர், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டமானது இன்றைய அரசால் அடுத்த வளர்ச்சியை அடையப்போகின்றது.

மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையை முதலில் பெற்றாக வேண்டும். இந்த தன்னம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும். படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த பயிற்சி முகாம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

திராவிட மாடல் அரசு

பள்ளிக்கூடங்கள், பாடங்கள் நடத்தும் கூடங்களாக மட்டுமில்லாமல் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகிய அனைத்தையும் வளப்படுத்த வேண்டும். பாதி பெற்றோர்களாக ஆசிரியர்களும், பாதி ஆசிரியர்களாக பெற்றோர்களும் செயல்பட வேண்டும்.

கல்வி கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக அது மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் அரசு நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் எல்லோரும் அடைவதற்கு அனைவரும் அனைத்து தகுதிகளையும் பெற்றாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மனநலம்-உடல்நலம் குறித்து மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன், கூடுதல் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பள்ளியின் முதல்வர் சரஸ்வதி வரவேற்றார்.

அரசாணை வெளியீடு

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் வகை செய்யும் வகையில் 7.5.2022 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும். இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

1.14 லட்சம் மாணவர்கள்

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசுக்கு சமூக நல இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றும், இதை ஒட்டுமொத்தமாக செயல்படுத்துவதற்குரிய பொறுப்புகள் அனைத்தும் முகமைத் துறைகளைச் சார்ந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கும்படி கடிதத்தில் கேட்டுள்ளார்.

ரூ.33.56 கோடி செலவு

அதை ஏற்று, காலை உணவு வழங்கும் திட்டத்தை 2022-2023-ம் ஆண்டில் முதல் கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதியை ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது இயன்ற அளவு அந்தந்த பகுதியில் விளையும் அல்லது கிடைக்கும் சிறுதானியங்களின் அடிபடையிலான சிற்றுண்டியை தயார் செய்து வழங்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளிகள்

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் படிக்கும் 5,941 மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தின் பயனை பெறுவார்கள். திருச்சி மாநகராட்சி (40 பள்ளிகள்), காஞ்சீபுரம் (20), கடலூர் (15), தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் (21), வேலூர் (48), திருவள்ளூர் (6),

தூத்துக்குடி (8), மதுரை (26), சேலம் (54), திண்டுக்கல் (14), நெல்லை (22), ஈரோடு (26), கன்னியாகுமரி (19) கோவை மாநகராட்சி (62 பள்ளிகள் என மொத்தம் 381 பள்ளிகளில் படிக்கும் 37 ஆயிரத்து 750 மாணவ-மாணவிகள் பயனடைவர்.

நகராட்சிகள்

விழுப்புரம், திண்டிவனம், புதுக்கோட்டை, பெரம்பலூர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, திருவண்ணாமலை, திருவத்திபுரம் (செய்யாறு), ஜெயங்கொண்டம், ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், பரமக்குடி, காரைக்குடி, கோவில்பட்டி, மன்னார்குடி, மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் படிக்கும் 17 ஆயிரத்து 427 மாணவ-மாணவிகள் பயனடைவார்கள்.

வட்டார பள்ளிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கரூர் கிருஷ்ணராயபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம், திருப்பூர் குண்டடம், சிவகங்கை எஸ்.புதூர், தேனி மயிலாடும்பாறை, விருதுநகர் காரியாபட்டி, திருச்சி துறையூர், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர், குருவிகுளம் ஆகிய வட்டாரத்தில் (கிராம ஊராட்சி) உள்ள 728 பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆயிரத்து 826 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

மலைப்பகுதி பள்ளிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை, நாமக்கல் கொல்லிமலை, திருவண்ணாமலை ஜவ்வாதுமலை, திண்டுக்கல் கொடைக்கானல், ஈரோடு தாளவாடி, நீலகிரி கூடலூர் ஆகிய மலைப்பகுதி வட்டாரங்களில் உள்ள 237 பள்ளிகளில் படிக்கும் 10 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

கிழமையும், உணவும்

திங்கட்கிழமை உப்புமா வகைகளில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். அதன்படி, ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்; சேமியா உப்புமா, காய்கறி சாம்பார்; அரிசி உப்புமா, காய்கறி சாம்பார்; கோதுமை ரவா, காய்கறி சாம்பார் வழங்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகைகளில் ஒன்றை வழங்க வேண்டும். ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி வழங்கப்பட வேண்டும்.

புதன்கிழமையில் ரவா பொங்கல், காய்கறி சாம்பார்; வெண் பொங்கல், காய்கறி சாம்பார் வழங்க வேண்டும்.

வியாழக்கிழமையில் சேமியா உப்புமா, காய்கறி சாம்பார்; அரிசி உப்புமா, காய்கறி சாம்பார்; ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்; கோதுமை ரவா, காய்கறி சாம்பார் வழங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமையில் செவ்வாய்க்கிழமை உணவு வகையான கிச்சடியுடன் ரவா கேசரி, சேமியா கேசரி ஆகிய இனிப்பு வழங்க வேண்டும்.

அளவு என்ன?

ஒரு குழந்தைக்கு ஒரு நாளுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி அல்லது அதே அளவு ரவை அல்லது கோதுமை ரவை அல்லது சேமியா; அந்தந்த ஊர்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம்; உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் (சமைத்த பின் 150-200 கிராம் உணவு மற்றும் 60 மில்லிகிராம் காய்கறியுடன் சாம்பார்).

இந்த திட்டம் செம்மையாக செயல்படுகிறதா? என்பதை மதிப்பீடு செய்ய ஏதுவாக அடிப்படை மற்றும் இறுதி நிலை ஆய்வுகளை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையினால் நியமிக்கப்படும் வெளிமுகமை நிறுவனங்களின் மூலமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்