சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மூலம் 281 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி தொடங்கப்படுகின்றன.
இந்த நிலையில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பள்ளி திறந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காலை 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை அருந்திவிட்டு வகுப்பிற்கு செல்லவும் முடிவு செய்யப்படுகிறது.
அம்மா உணவகங்களில் இருந்து விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.