கோவில் பூட்டை உடைத்து பணம்-வெள்ளி நகைகள் கொள்ளை
காயல்பட்டினத்தில் கோவில் பூட்டை உடைத்து பணம், வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் கோவில் பூட்டை உடைத்து பணம், வெள்ளி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சுடலைமாட சுவாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பப்பரப்பள்ளி சாலையில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 31, 1-ந் தேதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிேஷகம் முடிந்ததும் கோவில் பூசாரி மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
வெள்ளி கொள்ளை
நேற்று முன்தினம் காலையில் பூசாரி வந்து கோவிலை பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுதொடர்பாக அவர், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, பீரோவில் இருந்த வெள்ளி கண் மலர் 11 ஜோடி, வீரப்பல் 3 ஜோடி மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுநாளே மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே, கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்கள் உண்டியலில் ஆயிரக்கணக்கான ரூபாயை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அந்த பணம் முழுவதையும் மர்மநபர்கள் அள்ளிச்சென்று உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக பூசாரி மூர்த்தி ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.