கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட்டு

தோகைமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-16 18:41 GMT

கோவிலில் திருட்டு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி வடுகபட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலில் இருந்து அலார மணி அடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவில் உண்டியலில் இருந்த பணம் கோவில் சுற்றுச்சுவர் வரை ஆங்காங்கே சிதறி கிடந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளை பதிவு செய்து பார்வையிட்டனர். அப்போது, மர்மநபர்கள் கோவில் உண்டியலை உடைக்க முடியாதாததால், அங்குள்ள 2 இரும்பிலான வேலை எடுத்து வந்து உண்டியலை உடைத்து விட்டு பணத்தை திருடியதும், மற்றொரு வேலை கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்