கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நெல்லை டவுனில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
நெல்லை டவுன் பாரதியார் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவில் பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். நேற்று காலையில் அந்த பகுதி மக்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உண்டியலை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.