2 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
விக்கிரமங்கலம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் உண்டியலில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உண்டியல் பணம் திருட்டு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவில் பூசாரி புராசாமி (வயது 46) தனது வீ்ட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை அவர் கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவிலின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இதேபோல் சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கதவு பூட்டு உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி சாமிநாதன் (67) அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விக்கிரமங்கலம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.