மளிகைக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
ரெட்டிச்சாவடியில் மளிகைக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது.
ரெட்டிச்சாவடி:
ரெட்டிச்சாவடியை சேர்ந்தவர் மகாராஜா(வயது 28). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும், மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் மகாராஜா, கடைக்கு வந்து பார்த்தபோது, முன்பக்கம் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. கல்லா பெட்டியும் உடைக்கப்பட்ட நிலையில் அதில் இருந்த ரூ.9 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து மகாராஜா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.