வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை

கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-04 15:16 GMT

வானூர்:

கோட்டக்குப்பம் அமிர்தா கார்டன் பகுதியை சேர்ந்தவர் லியாகத் அலி. அவரது மனைவி நசீமா (வயது 58). லியாகத் அலி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் நசீமா தனது தாயாருடன் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை நசீமா பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு தனது தாயாருடன் ஸ்கூட்டரில் கடைத்தெருவுக்கு சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினாா்.

22 பவுன் நகை கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசில் நசீமா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பிரிஸ்டி வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிபோய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

நசீமா தனது தாயாருடன் கடைக்கு சென்றதை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் பகுதியில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்