இறச்சகுளத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் நகை திருட்டு
இறச்சகுளத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 1½ பவுன் நகை திருடி செல்லப்பட்டது.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அஸ்வின் நகரை சேர்ந்தவர் டெல்வின் பிராட்ரிக் (வயது 29). திருமணம் ஆகாத இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய அண்ணன் வெல்வின் வெஸ்லி (37) இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடித்து பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மனைவி சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குழந்தையுடன் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் தூத்துக்குடியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த டெல்வின் பிராட்ரிக் வீட்டின் கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அலமாரி உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 1½ பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுபற்றி அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.