திரவுபதியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழுப்புரம்:
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு ஊரல்கரையில் கரகம் ஜோடித்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் கோவிலுக்கு வந்து அங்குள்ள கொடிமரத்தில் அன்னம் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது. இதில் கீழ்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமனந்தாங்கல், காகுப்பம், சாலையாம்பாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அடுத்த மாதம்(மார்ச்) 31-ந் தேதி தீமிதி விழா நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் கீழ்பெரும்பாக்கம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.