தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைப்பதற்கு ஏற்ப பாராளுமன்ற தேர்தலில் வியூகம்- அன்புமணி ராமதாஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருணை உள்ளத்தோடு அரசு அணுக வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-11-20 05:25 GMT

பூந்தமல்லி,

திருவள்ளுர் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து முடிக்க வில்லை.மழைநீரை பாதுகாத்து தேக்கி வைக்க வேண்டும், சென்னையை சார்ந்த ஏரிகளை தூர்வாரி அதிக கொள்ளளவு கொண்ட ஏரிகளாக மாற்ற வேண்டும் என்று பலமுறை கூறி வருகிறோம். அந்த வேலைகள் நடக்கவில்லை. புழல், போரூர், ரெட்டை ஏரிகளில் கழிவுகள் கலந்து வருகிறது.

சென்னைக்கு புதிதாக பத்து ஏரிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியும் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஏரியாக உருவாக்க வேண்டும், இரண்டு திராவிட கட்சிகளும் அடுத்த தேர்தலை பற்றி தான் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு அல்ல. மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலம் பணி நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். இந்த சாலை இல்லாத காரணத்தால் இன்னும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இங்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

மெட்ரோ ரெயில் திட்டத்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கருணை உள்ளத்தோடு அரசு அணுக வேண்டும். 2026-ல் பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும், அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு ஆளுநர் கையெழுத்து இட்டார். தற்போது இந்த மசோதாவிற்கு கையெழுத்திட்டு முழுமையான சட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு தலைவர் ஆலப் பாக்கம் ஏ.ஆர்.டில்லிபாபு, மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் சிவகோவிந்தராசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்