சீரமைக்கும் பணியில் பிரிவு சாலைகள் புறக்கணிப்பு

சிங்கம்புணரி அருகே சீரமைக்கும் பணியில் பிரிவு சாலைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-10-05 19:12 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே சீரமைக்கும் பணியில் பிரிவு சாலைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

புதிய சாலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை உள்ளது. பிரான்மலை மலை அடிவாரத்தில் இருந்து பாப்பா பட்டி வழியாக பிரான்மலை 4 ரோடு சந்திப்பிற்கு வருகிற சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது.

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து சாலை செப்பனிடப்பட்டு புதிதாக தார்ச்சாலை போடும் பணி தொடங்கியது. பிரான்மலை 4 ரோடு சந்திப்பில் இருந்து சுமார் 650 மீட்டர் தூரம் உள்ள பாப்பா பட்டி வழியாக மலை அடிவாரம் வரை செல்லும் சாலை சுமார் 3½ மீட்டர் அகலத்தில் போடப்பட்டு உள்ளது. ஆனால் பல இடங்களில் பிரிவு சாலைகள் செப்பனிடப் படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

பள்ளம்

பாப்பாபட்டி சாலையின் பிரிவு சாலைகளில் ஒன்றான காலாடிபச்சேரி என்று அழைக்கப்படும் காந்தி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காலாடி பச்சேரி பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சிமெண்டு சாலைக்கும் தார் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி செப்பனிடப்படாமல் பள்ளம் உருவாகி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. அதே சமயம் இந்த பகுதியில் உள்ள பல பிரிவு சாலைகள் புறக்கணிக்கப் பட்டு முழுமை பெறாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. பிரிவு சாலையில் உள்ள பள்ளங்களை செப்பனிட்டு சிமெண்டு சாலைக்கும் தார் சாலைக்கும் இடைப்பட்ட சுமார் குறைந்த பட்ச தூரத்தை தார்சாலையாக மாற்றி தர வேண்டும்.

கோரிக்கை

அவ்வாறு மாற்றப்படவில்லை என்றால் காந்திநகர் நுழைவுவாயில் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தால் புதிய தார் சாலையும் அரிப்பு ஏற்பட்டு சாலை பழுதாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் போடப்பட்ட தார் சாலையை பிரிவு சாலைகளில் உள்ள குறுகிய தூரம் கொண்ட பகுதிகளை இணைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்