கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு காதலன் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு காதலன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு காதலன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரியில் காதல் மலர்ந்தது
மார்த்தாண்டம் அருகே கல்லுதொட்டியை சேர்ந்தவர் ரகுபதி. இவருடைய மகன் வெர்ஜின் ஜோஸ்வா (வயது 24). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது அவருடன் அதே கல்லூரியில் பயின்ற மடிச்சல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அந்த சமயத்தில் காதல் வானில் சிறகடித்தபடி காதல் ஜோடியினர் கல்லூரியின் வசந்த காலத்தை கடந்தனர். அந்த நாட்கள் வாழ்நாளில் இதுவரை இருந்ததை விட காதல் ஜோடிக்கு பேரின்பமாக இருந்தது.
படிப்பு முடிந்ததும் கசந்தது
இவ்வாறு காதல் பயணம் சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் கல்லூரி படிப்பு முடிந்தது. பிறகு மேற்படிப்பை மாணவி தொடர்ந்தார். அதாவது மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்தார்.
ஆனால் வெர்ஜின் ஜோஸ்வா மேற்படிப்பு படிக்க செல்லவில்லை. இந்தநிலையில் காதலில் திடீர் பிளவு ஏற்பட்டது. கல்லூரி நாட்களில் அடிக்கடி சந்தித்த காதல் ஜோடிக்கு அதன் பிறகு அந்த மாதிரியான சூழல் அமையவில்லை.
இதனால் முன்பு எந்த அளவுக்கு காதலின் மீது ஈர்ப்பு இருந்ததோ அது கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கி கசக்கும் நிலைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் மாணவி, காதலன் வெர்ஜின் ஜோஸ்வாவை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.
காதலி மீது வெறுப்பு
ஆனால் வெர்ஜின் ஜோஸ்வா, மாணவியுடனான காதலை விட முடியாமல் தவித்தார். மேலும் மாணவியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
அதன்பிறகு காதலனுடன் பேசுவதை அடியோடு புறக்கணித்தார். இது வெர்ஜின் ஜோஸ்வாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காதலிக்கும் போது மாணவியை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதுவே பிரிந்த பிறகு அவர் மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தியது.
சரமாரி அரிவாள் வெட்டு
இந்தநிலையில் மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவை தொடர்பு கொண்டு என்னுடைய மடிக்கணினி உன்னிடம் இருக்கிறது, அதை என்னிடம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
உடனே அவர் மார்த்தாண்டம் பஸ்நிலையம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி நேற்று நண்பகல் 12 மணிக்கு மாணவி, காதலனை பார்க்க சென்றார். அங்கு வெர்ஜின் ஜோஸ்வா ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் உன்னிடம் கடைசியாக சிறிது நேரம் பேச வேண்டும், தயவு செய்து என்னுடன் ஸ்கூட்டரில் ஏறு என மாணவியிடம் கெஞ்சியுள்ளார். உடனே மாணவியும் ஏறிக் கொண்டார்.
பிறகு மார்த்தாண்டம் அருகே உதியனூர்குளம் சாலை பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே ஸ்கூட்டரை வெர்ஜின் ஜோஸ்வா நிறுத்தியுள்ளார்.
அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி மிரண்டு போய் காதலனிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.
ஆனால் அவர் சுதாரிப்பதற்குள், அரிவாளை எடுத்த வெர்ஜின் ஜோஸ்வா மாணவியின் தலை, கை, உடல் என பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். உடனே அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினார். எனினும் வெட்டு பயங்கரமாக விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே சாய்ந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். உடனே வெர்ஜின் ஜோஸ்வா அரிவாளை அங்கேயே போட்டு விட்டு ஸ்கூட்டரில் தப்பி சென்று விட்டார்.
பின்னர் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவியை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருடைய உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எனினும் டாக்டர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த மார்த்தாண்டம் போலீசார் தப்பி ஓடிய காதலனை தேடி வந்தனர்.
காதலன் தற்கொலை
இதற்கிடையே மாணவியை வெட்டிய பகுதியில் இருந்து சிறிது தொலைவில் ஒரு வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தலை மற்றும் உடல் துண்டாகி பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது பலியானவர் வெர்ஜின் ஜோஸ்வா என்பது தெரியவந்தது. அவர் கொண்டு வந்த ஸ்கூட்டரும் அந்த பகுதியில் கிடந்தது.
அதாவது, மாணவியை வெட்டிய வெர்ஜின் ஜோஸ்வா, இனி நாம் உயிர் வாழக்கூடாது என முடிவெடுத்துள்ளார். அதன்படி அவர் மாமூட்டுக்கடை அருகே உள்ள ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று சிறிது நேரம் அங்கு மறைந்திருந்தபடி இருந்துள்ளார்.
ரெயில் முன் பாய்ந்தார்
மதியம் 1½ மணிக்கு அந்த வழியாக ரெயில் வந்தது. இதனை பார்த்த அவர் ஓடி சென்று ரெயில் முன் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.
பின்னர் வெர்ஜின் ஜோஸ்வா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருமணம் செய்ய மறுத்ததால் மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு ரெயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நண்பர்களுக்கு கடைசியாக குறுந்தகவல் அனுப்பிய காதலன்
காதலிக்கும் போது வெர்ஜின் ஜோஸ்வா தன்னுடைய காதலியை பலருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என பெருமையுடன் கூறி வந்துள்ளார். இது அவருடைய நண்பர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் தன்னுடைய காதல் தோல்வியை நண்பர்களுக்கு எப்படி தெரிவிப்பது என மனதுக்குள் அழுது புலம்பியுள்ளார். இந்தநிலையில் தான் நேற்று அவர் காதலியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நண்பர்களின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். அதோடு நின்று விடாமல் நான் சாகப்போகிறேன் என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தனது நண்பனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் அவர் காதலியை அரிவாளால் வெட்டி விட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது. இதனை அறிந்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திட்டமிட்டு காதலியை வெட்டிய கொடூரம்
காதலிக்கும் போது வெர்ஜின் ஜோஸ்வாவுக்கு காதலி தன்னுடைய மடிக்கணினி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். பிறகு காதலில் மனக்கசப்பு ஏற்பட்டதும் தன்னுடைய மடிக்கணியை தரும் படி அவர் காதலனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஏற்கனவே தன்னை வெறுத்து ஒதுக்கிய காதலி மீது ஆத்திரத்தில் இருந்த வெர்ஜின் ஜோஸ்வா, இது தான் அவரை தீர்த்துக் கட்ட சரியான சந்தர்ப்பம் என நினைத்தார். மடிக்கணினியை கொடுக்கும் போது காதலியை அரிவாளால் வெட்டி கொல்லலாம் என திட்டமிட்டார். அதன்படி அரிவாளை ஸ்கூட்டரில் மறைத்து வைத்தபடி காதலியை சந்திக்க சென்றார். தான் திட்டமிட்டபடி ஒதுக்குபுறமான பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இந்த கொடூர தாக்குதலில் அவர் இறந்து விட்டார் என நினைத்து வெர்ஜின் ஜோஸ்வா அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இப்படி செய்து விட்டோமே என அழுது புலம்பிய அவர் ரெயில் முன் பாய்ந்து நொடிப்பொழுதில் உயிரை மாய்த்துக் கொண்டார்.