வாலிபர் துண்டு, துண்டாக வெட்டி கொலை:இறந்தவர் முகத்தை கம்ப்யூட்டர் மூலம் வரைந்து அடையாளம் காணும் போலீசார்
வாலிபர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டவரின் முகத்தை வெவ்வேறு கோணங்களில் கம்ப்யூட்டர் மூலம் வரைந்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருேக உள்ள செரையாம்பாளையத்தில் பவானி ஆற்றில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஆண் பிணம் மிதந்து வந்தது. இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். மேலும் செரையாம்பாளையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிபாளையம் என்ற இடத்தில் மிதந்த கைகள், கால்கள், தலை போன்ற உடல் பாகங்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடல் மற்றும் அதன் பாகங்களையும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்தவர் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கொலை செய்யப்பட்டவரின் முகத்தை வெவ்வேறு கோணங்களில் கம்ப்யூட்டர் மூலம் வரைந்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.