பாம்பு கடித்து சிறுவன் பலி
வாணியம்பாடி அருகே தாய், மகனை பாம்பு கடித்தது. இதில் சிறுவன் பலியானான். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாம்பு கடித்தது
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி தவமணி (வயது 40) மற்றும் மகன் அரிகரன் (17) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை வேளையில் அரிகரனை ஏதோ பூச்சி கடித்ததாக தாயிடம் கூறியுள்ளார். அவர் எலி ஏதாவது கடித்திருக்கும் படுத்துக்கொள் எனக்கூறி உள்ளார்.
சிறிது நேரத்தில் தவமணியையும் கடித்து உள்ளது. அவரும் எலிதான் கடித்திருக்கும் என படுத்துக் கொண்டுள்ளார். காலையில் எழுந்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பது போன்று தெரிந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர். அப்போது வீட்டில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை அந்த பாம்புதான் கடித்துள்ளது.
சிறுவன் பலி
உடனடியாக அந்த பாம்பை அக்கம் பக்கத்து நபர்களை அழைத்து அடித்துக் கொன்றனர். பின்னர் பாம்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகனை அழைத்துக்கொண்டு தவமணி சென்றார். ஆனால் வழியிலேயே அரிகரன் இறந்து விட்டான். தவமணி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அரிகரன் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.