சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
குன்னூர் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஊட்டி,
குன்னூர் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
17 வயது சிறுமி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உலிக்கல் பகுதியை சேர்ந்தவர் காட்வின் (வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் காட்வினுக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து காட்வின் ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதற்கிடையே சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் கேட்டனர். அதற்கு சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக தெரிவித்தார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தததில், 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
போக்சோவில் கைது
இதையடுத்து காட்வின் மற்றும் சிறுமியின் பெற்றோர் கூடி பேசி, 2 பேருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் பிரசன்ன தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் இதுகுறித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.