தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-14 19:32 GMT

நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்த சதீஷ்வரன், பூதத்தான் சன்னதி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. அதே போல் டவுன் மேட்டுத் தெருவில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். மேலும் டவுன் பகுதியில் ஒரு வீட்டில் மர்மநபர் ஒருவர் புகுந்து செல்போன் திருடிச் சென்றார். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர். சிறுவனிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த சிறுவன் நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். சிறுவன் மீது நெல்லை மாநகர போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்