மயிலம் அருகேபெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை3 பேர் கைது-பரபரப்பு தகவல்
மயிலம் அருகே பெட்டிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம்,
பெட்டிக்கடைக்காரர்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). இவர், அதே கிராம பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுக்கும் இடத்தின் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மலர்கொடி(55) என்ற மனைவியும், துரைராஜ்(35), ஆனந்தராஜ்(29) ஆகிய 2 மகன்களும், ஹேமலதா என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் துரைராஜ் தந்தைக்கு உதவியாக பெட்டிக்கடை வியாபாரத்தை பார்த்து வந்தார். ஆனந்தராஜ் லாரி டிரைவராக உள்ளார். ஹேமலதாவுக்கு திருமணம் நடந்து திருக்கழுக்குன்றம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். மேலும் காமராஜ் சின்ன நெற்குணம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கேபிள் டி.வி. இணைப்பும் கொடுத்து வந்துள்ளார்.
வெட்டி படுகொலை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காமராஜ் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு, ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 அடி தொலைவில் சின்னநெற்குணம் செல்லும் சாலையில் சென்றபோது, அங்கு பதுங்கி இருந்த மர்மநபர்கள் திடீரென காமராஜை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் அவ்வழியாக வாகனங்களில் வந்த அதே ஊரை சேர்ந்த சிலர், காமராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்ததுடன், இதுபற்றி காமராஜ் குடும்பத்தினருக்கும், மயிலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு பதறிய மலர்கொடி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் ஓடிவந்து வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த காமராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதனிடையே திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், மயிலம் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காமராஜ் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து வீச்சரிவாள், செருப்பு, இருசக்கர வாகனத்தின் உதிரிபாகம் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாயால் சிக்கிய நபர்
இதையடுத்து காமராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பமிட்ட ராக்கி, காமராஜ் பக்கத்து வீடான ஏழுமலை மகன் ரமேஷ் என்பவருடைய வீடு அருகே சென்று நின்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், நண்பர்கள் 2 பேர் மூலம் காமராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வாக்குமூலம்
இதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-நான் சென்னை வேளச்சேரி பகுதியில் தங்கி, அங்குள்ள சி.சி.டி.வி. விற்பனை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த காமராஜுக்கும் இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் காமராஜ் எங்கள் குடும்பத்துக்கு எதிராக பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக வேலைகளை செய்து வந்தார். இதனால் எனது தாயாருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டது. எனக்கும், என் அண்ணனுக்கும் திருமணமாகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் சி.சி.டி.வி. கடை அருகே பஞ்சர் கடையில் வேலைபார்த்து வந்த நண்பர்களான சென்னை வேளச்சேரி சாஸ்திரி நகரை சேர்ந்த ஜெயக்குமார் மகன் சரத்குமார்(28), தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் தினேஷ்குமார்(19) ஆகியோரிடம் காமராஜை கொலை செய்ய கூறி, கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் முன்பணம் கொடுத்தேன். பின்னர் அவரை கொலை செய்து முடித்தவுடன் ரூ.4 லட்சம் தருவதாக கூறியிருந்தேன்.
3 பேர் கைது
அதன்படி நாங்கள் போட்ட திட்டப்படி நேற்று முன்தினம் சின்ன நெற்குணம் வந்ததுடன், காமராஜ் நடவடிக்கையை கண்காணித்தோம். பின்னர் அவர் கடையை பூட்டிவிட்டு வரும் வழியில் எனது நண்பர்கள் 2 பேரும் காமராஜை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டனர். இதையடுத்து ரமேஷ் மற்றும் அவர் கொடுத்த தகவலின்பேரில் சித்தாமூர் சவுக்கு தோப்பில் பதுங்கியிருந்த சரத்குமார், தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய வீச்சரிவாள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை நடந்து 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மற்றும் மயிலம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பாராட்டினார். இந்த சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.