கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா, ஜோதிகா பார்வையிட்டனர்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். தொல்பொருட்களை கண்டு வியந்தனர்.;
திருப்புவனம்,
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். தொல்பொருட்களை கண்டு வியந்தனர்.
கீழடி அருங்காட்சியகம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 8 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் பல்லாயிரக்கணக்கில் கிடைத்தன. இவை அனைத்தும் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையானவை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தொல்பொருட்கள் அங்கு ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் 6-ந் தேதியிலிருந்து பொதுமக்கள் பார்ைவயிடுகிறார்கள்.
தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்வையிட்டு சென்றனர். இனி கோடை விடுமுறை தொடங்குவதால் பார்வையாளர்கள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவக்குமார், சூர்யா, ஜோதிகா
இந்த நிலையில் நேற்று காலை நடிகர் சிவக்குமார், அவருடைய மனைவி லட்சுமி, இவர்களுடைய மகனான நடிகர் சூர்யா, மருமகள் நடிகை ஜோதிகா, சூர்யாவின் பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் கீழடி அருங்காட்சியகத்தை காண வந்தனர்.
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெற்று அருங்காட்சியகம் முழுவதும் சுற்றிப் பார்த்தனர். மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன், கீழடியின் சிறப்புகள், அகழாய்வு நடந்த விதம், கண்டெடுத்த பொருட்களின் சிறப்புகள், அவற்றின் வரலாற்று பின்னணி குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினார்.
பழங்கால பொருட்கள் ஒவ்வொன்றையும் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா பார்த்து வியந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். முக்கிய இடங்களில் நின்று படம் எடுத்துக்கொண்டனர். அருங்காட்சியக பணியாளர்கள், சூர்யா-ஜோதிகாவுடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டனர்.
காத்திருப்பு
நேற்று விடுமுறை நாள் என்பதால் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட நிறைய பேர் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்திருந்தனர். சிவக்குமார் குடும்பத்தினர் பார்வையிட்ட நேரத்தில் வெளிப்புற கேட் பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் பார்த்துவிட்டு காரில் சென்ற பிறகு மெயின் கேட் திறக்கப்பட்டு அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
கட்டணம் வசூல்
இந்த நிலையில் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட நேற்று முன்தினம் வரை இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முதல் (ஏப்ரல் 1-ந்தேதி) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.் உள்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.5-ம், சிறியவர்களுக்கு தலா ரூ.10-ம், பெரியவர்களுக்கு தலா ரூ,15-ம் வசூலிக்கப்படுகிறது.
வெளிநாட்டை சேர்ந்த சிறியவர்களுக்கு தலா ரூ.25-ம், பெரியவர்களுக்கு தலா ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது.
படம் எடுக்க ரூ.30, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.