பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வீசப்பட்ட குழந்தை உடல்

வேலூர் அருகே பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வீசப்பட்ட குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-30 18:05 GMT

குழந்தை உடல்

வேலூர் ஓட்டேரி ஏரி அருகே வாணியங்குளம் செல்லும் சாலையில் ஏரிக்கரையோரம் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உடல் ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். குழந்தையின் உடல் பாட்டிலில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அருகே உடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டுகளும், உடலில் ஏற்படும் சில கட்டிகளும் அங்கு சிதறி கிடந்தன.

போலீசார் விசாரணை

பின்னர் போலீசார் குழந்தையின் உடலையும், அந்த கட்டிகளையும் எடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் பாட்டிலில் பதப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் அருகே அந்த பாட்டில் உடைந்து கிடந்தது. எனவே மருத்துவமனை ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக சுற்று வட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்