பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும்

நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்

Update: 2022-11-27 22:20 GMT

நெல்லையில் விரைவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பொருநை இலக்கிய திருவிழா

தமிழக அரசு சார்பில் நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று மாலையில் நடந்தது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். பொது நூலக இயக்கக இயக்குனர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் பொன்னீலன், உதவி கலெக்டா் (பயிற்சி) கோகுல், பவா.செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் ஓலை சுவடிகள் வெளியிடப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். எழுத்தாளர் பொன்னீலன் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது;-

அகழாய்வு பணி

இந்தியாவில் இப்படி ஒரு இலக்கிய பெருவிழா தமிழ்நாட்டில் நெல்லையில் தான் நடத்தப்பட்டு உள்ளது. இலக்கியம் என்பது ஒரு இலக்கு. அந்த இலக்கியத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்த பகுதி தாமிரபரணி நதிக்கரை என்பது பெருமையாக உள்ளது. தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருதை 61 பேர் பெற்றுள்ளனர். இதில் 21 பேர் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமையாக உள்ளது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் ஜெர்மனை சேர்ந்தவர் அகழாய்வு மேற்கொண்டார். அவர் ஆய்வு செய்த பொருட்களை எல்லாம் அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் என வரலாறு சொல்கிறது. அந்த பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு கொண்டு வரவேண்டும்.

தொன்மையானது

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை பிரிப்பார்கள். இத்தனையும் ஒருங்கிணைந்து இருப்பது ஒன்றுபட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் என்பது நமக்கு பெருமையான ஒன்று.

ஆதிச்சநல்லூரியில் முதுமக்கள் தாழியில் இருந்து பெறப்பட்ட நெல்லை ஆய்வு செய்தபோது அது 3 ஆயிரத்து 155 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் மிகவும் தொன்மையாக நாகரிகம் பொருநை நாகரிகம் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு நாம் பெருமைகொள்ள வேண்டும்.

மத்திய அரசு மூலம் ஆதிச்சநல்லூரியில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒன்றும் வெளியிடப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.

அருங்காட்சியகம்

தமிழக அரசு பொருநை அருங்காட்சியகம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய வரலாற்றை பொருநை ஆற்றங்கரையில் இருந்து எழுத வேண்டும் என்பதற்காக விரைவில் நெல்லை புறவழிச்சாலையில் பொருநை அருங் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற பகுதிகளில் தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்