பத்திரத்தின் ஜெராக்ஸ் கொடுத்து கடன் வாங்கினார் - ரூ.22 லட்சத்துடன் பெண் வியாபாரி ஓட்டம்
பத்திரத்தின் ஜெராக்ஸ் கொடுத்து ரூ.22 லட்சம் கடன் வாங்கிய பெண் வியாபாரி வீட்டை காலி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வள்ளுவர் நகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 40). டிபன் கடை நடத்தி வந்தார். இவர், அதே பகுதி இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் ஏலச்சீட்டு நடத்தி வரும் ராஜேஸ்வரி என்பவரிடம் பணம் கட்டி வந்தார். இவர், 2 லட்சம் ரூபாய் சீட்டுகள் 3 கட்டி பணம் எடுத்து இருந்தார். பணத்தை சரியாக கட்டி வந்ததால் செல்வி மீது ராஜேஸ்வரிக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் செல்வி, தனது உறவினர்கள் தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அதன் விரிவாக்கத்துக்கு ரூ.22 லட்சம் கடன் தேவை என்று ராஜேஸ்வரியிடம் கூறினார். மேலும் அந்த நிறுவன பத்திரத்தின் ஜெராக்சையும் கொடுத்தார்.
ரூ.22 லட்சத்துடன் ஓட்டம்
இதை நம்பிய ராஜேஸ்வரி ரூ.22 லட்சத்தை செல்வியிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய செல்வி, திடீரென வீட்டை காலி செய்துவிட்டு மாயமாகி விட்டார். அவர் ரூ.22 லட்சத்துடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வி குறித்தும், அவர் கொடுத்த நிறுவனத்தின் பத்திர ஜெராக்ஸ் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.