உழவர் சந்தை அமைக்க பேரூராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு

கோத்தகிரி மார்க்கெட் அருகே உழவர் சந்தை அமைக்க பேரூராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கூட்டத்தில் வலியுறுத்தினர்.

Update: 2022-07-01 13:36 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மார்க்கெட் அருகே உழவர் சந்தை அமைக்க பேரூராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கூட்டத்தில் வலியுறுத்தினர்.

பேரூராட்சி கூட்டம்

கோத்தகிரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உமாநாத், செயல் அலுவலர்(பொறுப்பு) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மார்க்கெட் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை புதிய உழவர் சந்தை அமைப்பதற்காக வேளாண் வணிக துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மன்ற உறுப்பினர்கள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டால், அங்குள்ள வியாபாரிகளின் தொழில் பாதிக்கப்படும். மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இருந்து பேரூராட்சிக்கு குப்பை வரி, வாடகை கட்டணம் என சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. உழவர் சந்தை அமைத்தால் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

நுழைவு வாயில் அகற்றம்

பின்னர் 15-வது வார்டு உறுப்பினர் கணபதி பேசும்போது, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு கருவூலம் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சியின் முறையான அனுமதியை பெறாமல் பொது நடைபாதைக்கு நடுவே தனியார் மூலம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றார். இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நுழைவு வாயிலை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவு, செலவு கணக்கு

மேலும் கோத்தகிரி நகருக்கு குடிநீரை வினியோகம் செய்யும் ஈளாடா தடுப்பணையில் இருந்து கோத்தகிரி சக்தி மலைப்பகுதிக்கு குடிநீர் குழாய்கள் அமைப்பது, அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் மின்மோட்டார்கள் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதாவதை தடுக்கும் வகையில் புதிய மின் மாற்றி அமைப்பது, கோத்தகிரி கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையை ரூ.1 கோடி செலவில் புதுப்பிப்பது, பொதுப்பணித்துறையால் அரசு குடியிருப்பு கட்ட சக்திமலையில் 16 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கடந்த மாத வரவு, செலவு கணக்குகள் தாக்கல் செய்யபட்டது. முடிவில் பேரூராட்சி அலுவலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்