தஞ்சை அரண்மனை வளாகத்தில் 11 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.2½ கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது. 1½ லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
புத்தக திருவிழா
தஞ்சை அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை சார்பில் 5-வது புத்தக திருவிழா 11 நாட்கள் நடைபெற்றன. அதன் நிறைவுவிழா நேற்றுமாலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
11 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் 1½ லட்சம் வாசகர்கள் பங்கேற்றனர். இவர்களில் 20 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகளும், 40 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளும் அடங்குவர். ரூ.2½ கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் 11 நாட்களும் இலக்கிய அரங்கம், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சி, சிந்தனை அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பரிசுகள்
பின்னர் அவர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 138 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர் எழிலன், நீதிபதி இந்திராணி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் முருகன், என்ஜினீயர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேசும் புத்தகம் என்ற தலைப்பில் சிறப்பு பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசினார்.