ஓசூர் மூக்கண்டபள்ளியில் 12-வது புத்தக கண்காட்சி அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்

Update: 2023-07-14 19:45 GMT

ஓசூர்

ஓசூரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 12-வது புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் மூக்கண்டபள்ளியில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக கண்காட்சியை, உணவு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார். விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், நடைபெற்ற விழாவில், புத்தக கண்காட்சி தலைவர் அறம் கிருஷ்ணன் வரவேற்றார்.

இதில், அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளை செய்து வருகிறார். மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மதுரையில் சுமார் ரூ.150 கோடி மதிப்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, முதல்-அமைச்சர், நாளை (15-ந் தேதி) காமராஜர் பிறந்த நாளில் திறந்துவைக்க உள்ளார். மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசினார்.

இதில், துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் குப்புசாமி, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், துணைத்தலைவர் நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்