காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. நூலகர் கணேசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கி பேசியதாவது:- இன்றைய இணையதள உலகத்தில் மாணவர்கள் அதிக அளவில் அலைபேசியை பயன்படுத்துவதால் அவர்களின் புத்தகம் வாசிக்கும் திறன் குறைவது மட்டுமல்லாமல் மனதாலும் பாதிப்பு அடைகின்றனர். அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட புத்தக வாசிப்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. புத்தகத்தை வாசிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.
தேவகோட்டை சேவகன் அண்ணாமலை கல்லூரி உதவி பேராசிரியர் கண்ணதாசன் பேசுையில் புத்தகங்களை படிக்கும் போது அது சிந்தனை ஆற்றலை விரிவாக்குகிறது. புத்தகங்கள் மன அழுத்தத்தை நீக்கி அகத்தை அழகுபடுத்துகிறது. புத்தகங்களை வாசிக்கும் போது படைப்பு ஆளுமைகளோடு நேருக்கு நேராக பேசிய உணர்வு ஏற்படுகிறது என்றார். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் பழனிச்சாமி மற்றும் நூலகர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துணை நூலகர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.