நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மின்னஞ்சல் மூலம் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.;
சென்னை,
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளிகள், மால்கள், விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மின்னஞ்சல் முகவரி மூலமாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் டேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய குற்றப்பரிவு சைபர் கிரைம் போலீசார் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே இதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், இதுபோன்ற மிரட்டல்களை கண்டு பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்து வரும் நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.