வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:ஊட்டி ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு-மிரட்டல் விடுத்தவரை போலீஸ் தேடுகிறது

ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர்.

Update: 2022-10-05 19:00 GMT

ஊட்டி

ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களை கட்டி உள்ளது. இதற்கிடையே ஆயுத பூஜை, விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஊட்டி மலை ரெயிலில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திணறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஊட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தார்.

போலீஸ் தேடுதல் வேட்டை

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஊட்டி நகர் முழுவதும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் மணிக்குமார், சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஊட்டி ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரெயில் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை போடப்பட்டது. இதில் வெடிகுண்டு எங்கும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர்பு கொண்ட நபர் வெடிகுண்டு இருப்பதாக இந்தியில் பேசியுள்ளார்.

எனவே செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவர் டெல்லியில் இருந்து தொடர்பு கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது, என்றார்.இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊட்டியில் வெடிகுண்டு வெடிக்கும் என கலெக்டருக்கு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்