பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
கூடலூர்
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
மாரியம்மன் கோவில் தேரோட்டம்
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பிரசித்திபெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்்த கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
25-ந் தேதி காலை 6 மணிக்கு விசேஷ பூஜைகளும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. 26-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆற்றங்கரைக்கு சென்று கங்கை நீர் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
அதனைத்தொடர்ந்து தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் நள்ளிரவு கோவிலை அடைந்தது. முன்னதாக மைசூரு மற்றும் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தீச்சட்டி, பூங்கரகம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
மா விளக்கு பூஜை
இதேபோல் ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தமிழக அரசின் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களும் இயக்கப்பட்டதால் பொக்காபுரம் முதல் மசினகுடி வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் 4 கி.மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆனது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.