உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் 'ஸ்டீராய்டு' ஊசி பயன்படுத்தி வந்ததால் ரத்த வாந்தி எடுத்து சாவு

ஆவடி அருகே கட்டுடல் கொண்டு வர ‘ஸ்டீராய்டு’ மருந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் உடற்பயிற்சிகூட பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-03-30 04:38 GMT

உடற்பயிற்சியாளர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உண்டு. இவரது மகன் ஆகாஷ் என்ற சபரிமுத்து (வயது 25). இவர் திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி உடற்பயிற்சி கூடத்தில் ஆகாஷ் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட போது, திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கினார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த உடற்பயிற்சி கூடத்தின் மேலாளர் அவரை மீட்டு, திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

சிறுநீரகம் செயலிழப்பு

பின்னர், அங்கிருந்து அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக உறவினர்கள் அவரை பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஆகாசுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டு உறுப்புகள் செயலற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

'ஸ்டீராய்டு' மருந்து

ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப்பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 26-ந்தேதி நடைபெற இருந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற ஆகாஷ் கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வருவதற்கு உடலில் ஸ்டீராய்டு ஊசி அதிகளவில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டீராய்டு ஊசியை எடுத்துக் கொண்டால் உடற்பயிற்சியில் நீண்ட நேரம் ஈடுபடுவதற்கு தேவையான அதிகமான ஆற்றலை தரும் என்பதால் ஆகாஷ் அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசியை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது 2 சிறுநீரகமும் செயலிழந்து உயிரிழந்து இருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆணழகன் போட்டி

பிளஸ்-2 வரை படித்துள்ள ஆகாசுக்கு திருமணமாகவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் நடுக்குத்தகையில் உள்ள உடற்பயிற்சிகூடத்தில் பயிற்சியாளராக சேர்ந்து உள்ளார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைப்பது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். உடற்பயிற்சிகூட பயிற்சியாளர் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்