வயல் வழியாக சுடுகாட்டுக்கு தூக்கி செல்லப்பட்ட இறந்தவரின் உடல்

கீழையூர் அருகே வயல் வழியாக இறந்தவரின் உடல் சுடுகாட்டுக்கு தூக்கி செல்லப்பட்டது. சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-16 19:15 GMT

கீழையூர் அருகே வயல் வழியாக இறந்தவரின் உடல் சுடுகாட்டுக்கு தூக்கி செல்லப்பட்டது. சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதை இல்லை

நாகை மாவட்டம் கீழையூர் அருகே மீனம்பநல்லூர் கிராமம் மெயின் ரோடு பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் யாரேனும் இறந்து விட்டால் இறுதி சடங்குகள் செய்ய அவர்களுடைய உடலை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரம் வயல் வழியாக இறந்தவர்கள் உடலை தூக்கி செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. வயல் வழியாக உடலை தூக்கி செல்பவர்கள் வயல் பாதையில் நிலை தடுமாறி கீழே விழும் ஆபத்தும் உள்ளது.

ஊராட்சி தணைத்தலைவர்

இந்த நிலையில் மீனம்பநல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி (வயது48) என்பவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவருடைய உடலை சுடுகாட்டுக்கு வயல்கள் வழியாக நேற்று மாலை தூக்கி சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.

அப்போது உடலை தூக்கி சென்றவர்கள் வயல் வழியாக சுடுகாட்டுக்கு தூக்கி செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக கவலை தெரிவித்தனர். மேலும் சுடுகாட்டுக்கு செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுடுகாட்டுக்கு பாதை வசதி குறித்து அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டு உரிய ஆய்வுகள் மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும். 

Tags:    

மேலும் செய்திகள்